தோட்டத்துக்குள் புகுந்து வாழைத்தார்களை வெட்டி கடத்த முயற்சி
கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து, வாழைத்தார்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழைத்தார்கள் திருட்டு
கூடலூர் 10-வது வார்டு கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 57) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், கூடலூர்-குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் உள்ளது. அந்த தோட்டத்தில் சுதாகர், வாழை பயிரிட்டுள்ளார்.
தற்போது வாழைத்தார்கள் நன்கு விளைச்சல் அடைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தநிலையில் அவரது தோட்டத்துக்குள் இரவில், மர்ம நபர்கள் புகுந்து வாழைத்தார்களை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் இரவில் தோட்டத்துக்கு அவ்வப்போது சென்று வந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்துக்கு சுதாகர் சென்றார். அப்போது 4 பேர், தோட்டத்துக்குள் புகுந்து வாழைத்தார்களை வெட்டி கடத்தி செல்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட சுதாகர் அதிர்ச்சி அடைந்தார்.
4 பேர் கைது
இதுகுறித்து அவர், கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் உடனடியாக தோட்டத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு வாழைத்தார்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (57), தங்கராஜ் (49), முத்தையா (30), ஜாகிர் உசேன் (42) என்று தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வாழைத்தார்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கூடலூர் பகுதியில் தொடரும் வாழைத்தார்கள் திருட்டு சம்பவம், விவசாயிகளை பீதி அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.