திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்


தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. விழாவின் முக்கிய ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடக்கிறது.

திருவாரூர்

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. விழாவின் முக்கிய ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடக்கிறது.

பங்குனி உத்திர திருவிழா

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆழித்தேரோட்டம்

ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதி கருதப்படுகிறது. ஆனால் பல்வேறு நிர்வாகம் காரணங்களால் ஆழித்தேர் திருவிழா காலம் கடந்து நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக ருணவிமோசகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்துடன், பங்குனி திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. அதன் பின்னர் தேவாசியர் மண்டபம் வாசலில், விநாயகர், ஆழித்தேர் ஆகிய இடங்களில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

தீர்த்தவாரி

இதையடுத்து கமலாலய குளத்தில் தீர்த்தவாரி கொடுப்பதற்காக கோவிலில் இருந்து திருஞானசம்பந்தர் பல்லக்கில் புறப்பட்டு மேல கோபுரவாசல் வழியாக கமலாலயம் குளத்திற்கு எதிரே எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதனை தொடர்ந்து புதுத்தெரு நாலுகால் மண்டகத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். இன்று(திங்கட்கிழமை) மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story