திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
தெப்ப திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குகிறது. இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு இந்த கோவிலின் தெப்பத் திருவிழாவாகும்.
இந்த தெப்பத்தின் நீளம் 50அடி, அகலம் 50 அடி ஆகும். உயரம் 30 அடி. 520 காலி பேரல்களால் கட்டப்படும் தெப்பத்தில் 500 பக்தர்கள் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்படும். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.
பந்தக்கால் முகூர்த்தம்
இதை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் உள்துறை கட்டளை சார்பில் ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மேற்கு வீதியில் ஏராளமான மூங்கில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காலி பேரல்களை வைக்கப்பட்டுள்ளது.. தெப்பம் கட்டும் பணியில் 15 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தெப்பம் கட்ட 15 நாட்கள் வரை ஆகும்.
3 நாட்கள் நடக்கிறது
தெப்பத் திருவிழாவின் முதல்நாள் அன்று இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை அடைவார். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளி விடிய விடிய தெப்ப திருவிழா நடக்கும். தெப்பம் குளத்தை 3 முறை சுற்றி வலம் வரும். ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரம் ஆகும். தெப்பதிருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.