தூத்துக்குடி அருகே, வாகனம் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற வளையல் வியாபாரி பலி
தூத்துக்குடி அருகே, வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வளையல் வியாபாரி பலியானார்
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே, வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வளையல் வியாபாரி பலியானார்.
வியாபாரி
தூத்துக்குடி கோமஸ்பரம் பகுதியைச் சேர்ந்தவர் உலகமணி (வயது 58). இவர் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வளையல் வியாபாரம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்திற்கு சென்று வளையல் வியாபாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். உப்பாற்று ஓடை பகுதியில் மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதால் மாற்று பாதையான தூத்துக்குடி துறைமுகம்- மதுரை ரோட்டில், பாலம் வேலை முடிவடையும் இடத்தில் சென்று மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
பலி
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை, அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். உலகமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.