நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும்


பனியன் தொழில் சிறக்க நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

பனியன் தொழில் சிறக்க நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறைக்க வேண்டும்

பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:-

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் நூல் விலை குறைந்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும். பஞ்சு விலை குறைந்து வருகிறது. அதற்கு ஏற்ப நூல் விலையையும் குறைத்து கடந்த மார்ச் மாத நூல் விலையை அறிவித்தால் பனியன் உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும்.

ஏற்கனவே நூல் விலை உயர்வால் ஆர்டர்களை பெற தயக்கம் காட்டியதால் திருப்பூரை தேடி வந்த ஆர்டர்கள் மாறி சென்று விட்டன. நூல் விலையை மேலும் குறைத்து நூற்பாலை உரிமையாளர்கள் திருப்பூர் பனியன் தொழில் மேம்பட ஒத்துழைக்க வேண்டும்.

செயற்கை விலையேற்றம்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம்:-

நூல் விலை இந்த மாதம் கிலோ ரூ.40 குறைந்துள்ளது. கடந்த 18 மாதங்களாக அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பனியன் தொழில் எந்த அளவுக்கு சிரமத்தை சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஏப்ரல், மே மாதங்களில் கிலோவுக்கு ரூ.80 வரை திடீர் உயர்வு ஏற்பட்டது. இதனால் ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வந்தும், அதை ஏற்று செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலை திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டது.

பஞ்சை வியாபாரிகள் பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்தியதால் நூல் விலை கடுமையாக உயர்ந்தது. அதனால் பஞ்சை யூக பேர வணிகத்திலிருந்து நீக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் பதுக்கல் பஞ்சு தற்போது வெளியே வர தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாகவே பஞ்சு விலை குறைந்து நூல் விலையும் குறைந்து வருகிறது.

நிலையான நூல் விலை

மத்திய அரசு பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்கம் செய்து அறிவித்தது. வெளிநாடுகளில் இருந்து பருத்தி இன்னும் இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால் பஞ்சு விலை இறங்கி வருகிறது. இன்னும் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யும் போது மேலும் குறையும். டாலர் மதிப்பு உயர்ந்து வருவது சாதகமான சூழ்நிலையை திருப்பூருக்கு ஏற்படுத்தி உள்ளது. நூல் விலை மேலும் குறையும் போது ஆர்டர்களை எடுத்துச் செய்வது அதிகரிக்கும்.

பொதுவாக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஆர்டர்கள் வருகை மந்தமாகவே இருக்கும். செப்டம்பர் மாதத்தில் புதிய ஆர்டர்கள் வருகை அதிகரிக்க தொடங்கும். அதற்குள் பஞ்சு விலை குறைவு ஏற்பட்டு, நூல் விலை நிலையான விலையாக தொடரும்போது புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்யும் போது பனியன் உற்பத்தி முழு வேகம் பிடிக்கும். இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெருகும். இதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

பதுக்கல் பஞ்சு வெளிவருகிறது

டீமா தலைவர் முத்துரத்தினம்:-

இந்தியாவில் பருத்தி உற்பத்தி தற்போது இல்லை. புதிய பருத்தி பஞ்சு வர இன்னும் 3 மாதம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுவரத்து இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் பஞ்சு விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பதுக்கல் பஞ்சை வியாபாரிகளிடமிருந்தோ, நூற்பாலைகளில் இருந்தோ வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

அதன் விளைவாக வேறு வழியின்றி பதுக்கல் பஞ்சு வெளியே வர தொடங்கி இருக்கிறது. 40 லட்சம் பேல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது. மேலும் நூல் விலை குறைந்தால் மட்டுமே பனியன் உற்பத்தியை தொடங்குவது என்று உற்பத்தியாளர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். இதன் காரணமாக நூற்பாலைகளில் 90 சதவீதம் நூல் விற்பனை சரிந்து விட்டது. இருப்பில் உள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் நூல் விலையை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விலை குறைவு என்பது போதாது. வானுயர நூல் விலையை உயர்த்தி விட்டு இப்போது கிலோவுக்கு ரூ.40 குறைத்தால் மட்டும் போதாது. இன்னும் நூல் விலையை குறைக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வந்து நூல் விலை சீராக இருக்க மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story