பள்ளி மாணவ-மாணவிகளின் வாகன வசதி உதவித்தொகைக்காக வங்கி கணக்கு தொடக்கம்


பள்ளி மாணவ-மாணவிகளின் வாகன வசதி உதவித்தொகைக்காக வங்கி கணக்கு தொடக்கம்
x

பேரணாம்பட்டு அருகே 3½ கிேலா மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளின் வாகன வசதி உதவித்தொகைக்காக வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே 3½ கிேலா மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளின் வாகன வசதி உதவித்தொகைக்காக வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இடை நின்றலை தவிர்த்திட

பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துலுக்கன்குட்டை கிராமம் மற்றும் கொல்லைமேடு ஆகிய பகுதிகளில் இருந்து 25 மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் தினமும் நடந்து சென்று படித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பள்ளி இல்லாத ஊரில் இருந்து குறைந்த பட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்கும் மாணவ-மாணவிகள் இடை நின்றலை தவிர்த்திட வாகன வசதிக்காக மாதந்தோறும் உதவி தொகையாக ரூ.600 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை மாணவ-மாணவிகளுடைய தாயாரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், மாணவ-மாணவிகளின் தாயார் பெயரும், மாணவ-மாணவிகளின் பெயரும் இணைந்த வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு

அதைத்தொடர்ந்து பல்லலகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பல்லலகுப்பம் ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கயிலைநாதன் ஆகியோர் பேரணாம்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் நந்திதாதேவியை சந்தித்து மேற்கண்ட தகவலை தெரிவித்தனர்.

அதன்பேரில் கிளை மேலாளர் நந்திதாதேவி பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடல் செய்து, மாணவ-மாணவிகளின் கல்வி முன்னேற்றத்துக்கு சிறு சேமிப்பு அவசியம் குறித்து விளக்கி 25 மாணவ-மாணவிகளுக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்தார். இந்தச் சேமிப்பு தொகை, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வாகனத்தில் வந்து செல்ல முதல் முறையாக பயன்படுத்தப்பட உள்ளது.


Next Story