கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 180 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
குமரியில் கடந்த 7 மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 180 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரியில் கடந்த 7 மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 180 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா வியாபாரிகள்
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் குண்டர் சட்டத்திலும் கைது செய்கின்றனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு போலீசாரின் கெடுபிடியால் குறைந்துள்ளது. கஞ்சா இல்லாத மாவட்டமாக குமரியை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். கஞ்சா விற்பனை குறித்து ஏதேனும் தகவல் வந்தால் தைரியமாக பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் காக்கப்படும்.
வங்கி கணக்குகள் முடக்கம்
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 7 மாதங்களில் மட்டும் 180 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர கண்காணிப்பால், மாவட்டத்தில் முன்பு இருந்ததை விட பலமடங்கு கஞ்சா விற்பனை குறைந்துள்ளது.
இதற்கிடையே கஞ்சா விற்பனையில் கைதாகும் நபர்களிடம் விசாரிக்கும்போது, முன்பெல்லாம் 50 கிராம் கஞ்சா ரூ.200-க்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்கள். போலீசாரின் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். இதன்மூலம் கஞ்சா இல்லாத மாவட்டமாக குமரி விரைவில் மாறும். இதற்கு பொதுமக்களுகம் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.