வங்கி காசாளர் வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை


வங்கி காசாளர் வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே திருமணமான ஓராண்டில் வங்கி காசாளர் வீட்டில் 18 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்ததோடு, சீர்வரிசையாக கொடுத்த காரையும் திருடிச்சென்றனர்.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சசிக்குமார்(வயது 28). இவர், நெய்வேலியில் உள்ள கனரா வங்கி கிளையில் காசாளராக உள்ளார். இவருக்கும், தொரப்பாடியை சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதியினர் தற்போது குடும்பத்துடன் நெய்வேலியில் வசித்து வருகின்றனர். இருப்பினும் சசிக்குமார் 2 நாட்களுக்கு ஒரு முறை மனைவியுடன் ஒறையூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

18 பவுன் நகைகள் கொள்ளை

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டனர். பின்னர் அவர்கள், நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த கார் சாவியை எடுத்து, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரையும் திருடிச் சென்றனர்.

சீர்வரிசையாக கொடுத்திருந்தது

இதனிடையே நேற்று காலை வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதி கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், சசிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், ஒறையூருக்கு விரைந்து வந்து பார்த்தார். வீட்டில் இருந்த பீரோ திறந்த நிலையில், அதில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன.

பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் கார் திருமணத்தின்போது பிரவீனாவுக்கு அவரது பெற்றோர் சீர்வரிசையாக கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது.

கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட கூப்பர், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story