மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை


மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை
x

மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி ரோகிணி பிரியா (45), நாகர்கோவிலில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்தார். இந்த தம்பதியின் ஒரே மகள் அர்ச்சனா (13). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டில் 3 பிணங்கள்

இந்த நிலையில், நேற்று வீட்டிற்குள் ஒரு அறையில் ஒரே சேலையில் ரமேசும், ரோகிணி பிரியாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். கட்டிலில் இறந்த நிலையில் அர்ச்சனா கிடந்தார்.

அப்போது அங்கு வந்த ரமேஷின் அண்ணன் மகாத்மா என்பவர்

3 பேரின் உடல்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார். தகவல் அறிந்து தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ரமேசும், ரோகிணி பிரியாவும் சேர்ந்து எழுதியது போல் இருந்துள்ளது. அதாவது, அவர்களுடைய சொத்து யாருக்கு என்பது பற்றிய விவரம் மற்றும் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்பது பற்றிய தகவலும் எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மகளை கொன்று தற்கொலை

அர்ச்சனாவின் உடல் அருகில் விஷ பாட்டில், செவ்வாழை பழம் கிடந்துள்ளது. அதனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமேசும், ரோகிணி பிரியாவும் மகள் அர்ச்சனாவுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருப்பினும் அவர்களது இந்த துயர முடிவுக்கான உறுதியான காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில், ரோகிணி பிரியாவிற்கு வயிற்றில் கட்டி இருந்ததாகவும், இதனால் அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரோகிணி பிரியா முடிவு செய்துள்ளார். இதற்காக தன்னுடைய அக்காள் மேகலாவிடம் ரூ.2 லட்சம் கொடுத்து வைத்துள்ளார். இந்தநிலையில் தான் தம்பதி இருவரும் மகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியுள்ளனர்.

எனவே நோயின் கொடுமை காரணமாக விபரீத முடிவை தேடிக் கொண்டார்களா? என்ற சந்தேகம் நிலவுகிறது. அதேநேரத்தில் குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது அவர்களுக்கு யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story