எழுமலை அருகே லாரி மோதி வங்கி ஊழியர் சாவு- கிராம மக்கள் சாலை மறியல்
எழுமலை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதலில் தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி,
எழுமலை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதலில் தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வங்கி ஊழியர் சாவு
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜய் பிரீத்(வயது 23). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் அவரது ஊரிலேயே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று, அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
சாலை மறியல்
இந்த விபத்தை பார்த்ததும் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். கிராம மக்கள் ஒன்று திரண்டு டி.கிருஷ்ணாபுரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தின் வழியாக மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அதிக அளவில் செல்கிறது. அதுவும் ஊருக்குள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமமாக உள்ளது. இந்த விபத்துக்கு காரணம் டிப்பர் லாரி டிரைவர் வேகமாக ஓட்டி வந்தது தான். எனவே அவரை கைது செய்ய வேண்டும். அதோடு எங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரிகள் வேகமாக செல்வதை தடுக்க வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.