வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக நேற்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி எட்வின் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரெங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி திலகர், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி செந்தில் ஆறுமுகம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகி சார்லஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
வாரத்தில் 5 நாட்கள் வங்கி வேலை முறையை அமல்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31-ந்தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அதிக அளவில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.