நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.15 லட்சம் கடனுதவி கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.15 லட்சம் கடனுதவி கலெக்டர் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
பொது கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.