20 சதவீதம் கூடுதல் வங்கிக்கடன் வழங்கி உதவ வேண்டும்


20 சதவீதம் கூடுதல் வங்கிக்கடன் வழங்கி உதவ வேண்டும்
x
திருப்பூர்


பின்னலாடை தொழில் மேம்பட 20 சதவீதம் கூடுதல் வங்கிக்கடன் வழங்கி உதவ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்கே.எம்.சுப்பிரமணியன் கடிதம் அனுப்பினார்.

வட்டி சலுகை உயர்வு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பட்ஜெட்டுக்கு முன் பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலை மேம்படுத்த, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்புக்கு மத்திய அரசு வழிகாட்ட வேண்டும். பனியன் தொழில் நிலையாக நீடித்து இருக்க உதவி செய்வதுடன், தொழில் நகரான திருப்பூருக்கு மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 1 சதவீத தொகையை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக வழங்கி திருப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டியில் 2 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீத வட்டி சலுகை வழங்க வேண்டும். பின்னலாடை தொழில் பாதிப்புகளை கடந்து வந்துள்ள நிலையில், வட்டி சலுகை உயர்வு அவசிய தேவையாக உள்ளது.

20 சதவீதம் கூடுதல் கடன்

திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்டதை போல் கூடுதல் கடன் அளிப்பு திட்டத்தில் கடனுதவி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில், நிறுவனங்களின் கடன் நிலுவையில் 10 சதவீதம் கூடுதல் கடனாக வழங்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் மந்தமாக உள்ளதால் 20 சதவீதம் கூடுதல் வங்கிக் கடன் வழங்கி உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


Next Story