தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, தொழில்கல்வி படித்த முதல் தலைமுறை, தொழில் முனைவோர் தொழில் தொடங்க உதவி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவினருக்கு வணிக போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, வாகனம் வாங்குவது உள்பட ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை 25 சதவீதம் மானியம் மற்றும் கூடுதலாக 10 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படும். 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். வயது வரம்பு 21 முதல் 45 வயது வரை ஆகும். பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்புகொள்ளலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.