சுயஉதவிக்குழுக்களில் சேரும் பெண்களுக்கு வங்கி கடன்; கலெக்டர் விசாகன் தகவல்


சுயஉதவிக்குழுக்களில் சேரும் பெண்களுக்கு வங்கி கடன்; கலெக்டர் விசாகன் தகவல்
x

நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சுயஉதவிக்குழுக்களில் சேரும் பெண்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வறுமைக்கோடு பட்டியலில் உள்ள ஏழைகள், நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வறுமைக்கோட்டு பட்டியலில் உள்ள ஏழைகள், நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சேரலாம்.

இதற்கு வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரே பகுதியை சேர்ந்த பெண்கள், ஒரு குழுவில் சேர வேண்டும். மேலும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியம். ஒருவர் ஒரு சுய உதவிக்குழுவில் மட்டுமே சேர வேண்டும். ஆதார் அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும். கல்வித்தகுதி தேவையில்லை.

சுயஉதவிக்குழு தொடங்கி 3 மாதங்கள் ஆனதும் ரூ.10 ஆயிரம் வீதம் சுழல் நிதி, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, வங்கிக்கடன் இணைப்பு, வாழ்வாதார மேம்பாடு ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பெண்கள் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story