வங்கியில் வாங்கும் கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும்
வங்கியில் பொதுமக்களின் வரிப்பணம் தான் கடனாக வழங்கப்படுகிறது. எனவே கடன் வாங்கும் நபர்கள் அதனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு முகாம்
வேலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான தனி சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடனுதவி
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:- இந்திய அரசியல் சாசன சட்டத்தை இயற்றியவர் அண்ணல் அம்பேத்கர். அவர் இந்திய குடிமகனாக இருப்பவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் எந்த பகுதியிலும் சென்று தொழில் தொடங்கலாம். இது அவர்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் தொழில் செய்வதற்கு முழுஉரிமை உண்டு. தமிழக அரசு புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழில் தொடங்க, தொழில்முனைவோராக மாறுவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வங்கிகளில் கடனுதவி மற்றும் மானியமாகவும் பெற்று தொழில் தொடங்கலாம். இதற்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நபர்களை தொழில்முனைவோராக மாற்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை பயன்படுத்தி அனைவரும் தொழில்முனைவோராக வர வேண்டும்.
திருப்பி செலுத்த வேண்டும்
வங்கிகளில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மானியத்தை செலுத்த வேண்டாம். ஆனால் கடனை கட்டாயம் சரியாக திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்தாவிட்டால் அடுத்த தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள். சிவில் ஸ்கோர் அடிப்படையில் கடன் செலுத்தாதவர்களின் குடும்பத்தினருக்கு வங்கிகளில் கடன் கிடைப்பது சிரமம். தொழில் தொடங்க வங்கியில் வாங்கும் கடனை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை வட்டிக்கு கொடுக்க கூடாது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் வகையில் தொழில் தொடங்க வேண்டும். வங்கிகளில் வழங்கப்படும் கடன் மக்களின் வரிப்பணம். எனவே கடன் வாங்கும் நபர்கள் அதனை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவி, மானியம் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.