476 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.33¼ கோடி வங்கி கடனுதவி


476 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.33¼ கோடி வங்கி கடனுதவி
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 476 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.33 கோடியே 21 லட்சம் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 476 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.33 கோடியே 21 லட்சம் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடனுதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள், மணிமேகலை விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு, ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33 கோடியே 21 லட்சம் மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரை கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களை அமைக்க தொடங்கியது.

3 முக்கிய திட்டங்கள்

இந்த நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ஜெயராணி, குமரவேல், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story