சேவை குறைபாட்டால் வங்கி மேலாளருக்கு 3 மாதம் ஜெயில்


சேவை குறைபாட்டால் வங்கி மேலாளருக்கு 3 மாதம் ஜெயில்
x

சேவை குறைபாட்டால் வங்கி மேலாளருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

வேலூர்

சேவை குறைபாட்டால் வங்கி மேலாளருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

வங்கி சேவை குறைபாடு

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ரத்தினகிரியை அடுத்த கீழ்மின்னல் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையை செலுத்தியுள்ளார். ஆனால் வங்கியில் சவுகத்அலி வழங்கிய காசோலையை முறையாக கவனிக்காமல் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் காசோலையை தொலைத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் வங்கி மேலாளரிடம் கேட்டபோது சரிவர பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர் வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு சவுகத் அலிக்கு வழங்க வேண்டிய ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தொகையும், ரூ.2 ஆயிரம் வழக்கு செலவு தொகையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் வங்கி தரப்பில் இதுவரை பணம் அவருக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தார்.

3 மாதம் ஜெயில்

அப்போது வங்கி மேலாளருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வங்கி தரப்பில் மேலாளர் ஆஜராகி பணம் விரைவில் கொடுப்பதாக தெரிவித்தார். எனினும் பணம் கொடுக்கப்படவில்லை. மேலும் சவுகத் அலியை அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம் வங்கி கிளை மேலாளருக்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் அதை கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அவருக்கு வழங்க வேண்டிய ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் இந்ததொகையில் இருந்து 9 சதவீதம் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இணையதள முகவரி

நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சிசுந்தரம் கூறுகையில், பொதுமக்கள் தங்களது புகார்களை www.edaakhil.nic.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம் என்றார்.


Next Story