மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தக்கார் பிரபு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உண்டியல்களை பிரித்து பணத்தை எண்ணினர்.
இதுகுறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில், அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோவில் விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். கடந்த 1½ ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன்படி, உண்டியலில் ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்து 976 ரொக்கம், 96 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர் என்றனர். உண்டியல் காணிக்கை எண்ணியதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் கிருஷ்ணகிரி அணை போலீசார் 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.