கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்ைத கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்ைத கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

அந்தோணியார் ஆலயம்

சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு தினமும் பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். இதில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து ெகாள்வார்கள். நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்த பின்பு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

பின்னர் நேற்று காலையில் ஆலயத்தின் மின்விளக்குகளை அணைப்பதற்காக ஆலய நிர்வாகி எப்ரேன்ரவி சென்றார். அப்போது ஆலயத்தின் முன்பு அந்தோணியார் குருசடியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆலயத்தின் கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உண்டியல் உடைப்பு

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில் இருந்த மரப்பெட்டி உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆலயத்தில் இருந்த மர பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து ஆலயத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து மர பீரோவையும் உடைத்துள்ளனர். அதில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த உண்டியல்கள் நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்ததாகவும், அவற்றில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஆலய நிர்வாகி எபரேன்ரவி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story