வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு


வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு
x

வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு நடந்தது. இதனை திருடிய தற்காலிக ஊழியரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி தஞ்சை நகரின் மையப்பகுதியில் இருப்பதால் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த வங்கிக்கு தினமும் ஏராளமானோர் பணப்பரிவர்த்தனைக்காக வந்து செல்வார்கள்.

இந்த வங்கியில் தஞ்சை மாவட்டம் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம்(வயது 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வங்கியில் பணம் எண்ணும் பிரிவுக்கு முருகானந்தம் சென்றார்.

ரூ.9 லட்சம் திருட்டு

அப்போது அங்கு எந்திரம் மூலம் பணியாளர் ஒருவர் பணத்தை எண்ணி வைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் எண்ணி வைத்து இருந்த ரூ.9 லட்சத்தை முருகானந்தம் திருடினார். தொடர்ந்து பணம் எண்ணும் பணி முடிந்த பிறகு ஊழியர் பார்த்தபோது அதில் ரூ.9 லட்சம் குறைந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி அதிகாரிகள் உதவியுடன் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் முருகானந்தம் பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது.

தற்காலிக ஊழியர் கைது

இது குறித்து வங்கி மேலாளர் அஜய்குமார், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story