அனுமதியின்றி பதாகை; மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி பதாகை வைத்தது தொடர்பாக மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி:
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி திருச்சி புத்தூர் நான்குரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பா.ஜ.க. சார்பில் உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பு, புத்தூர் நான்குரோடு, தில்லைநகர் ஆர்ச் உள்பட பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் போலீசாரின் அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் சுகுமாரி ராஜா, கீதாராணி, ரேகா கார்த்திகேயன், அச்சக உரிமையாளர் தங்கபாண்டியன் உள்பட 7 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் தில்லைநகர் ஆர்ச் அருகே பதாகை வைத்ததாக பா.ஜ.க. மண்டல பொறுப்பாளர் காளீஸ்வரன் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.