பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு


பொன்னியின் செல்வன்-2  திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட  தடை -  ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2023 6:28 PM IST (Updated: 28 April 2023 6:37 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது

சென்னை,

பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தை சட்டவிரோதமாக 3888 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story