முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்க பொதுக்குழு கூட்டம்
பகண்டை கூட்டுரோட்டில் முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியம் பகண்டை கூட்டு ரோட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் எம்.நடேசன், மாநில பொதுச்செயலாளர் கம்பம் ஏ.ராஜன், மாநில பொருளாளர் எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் முடி நீக்கம் செய்யும் தொழிலாளர்களையும், நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். முடி திருத்துவோர் சமூகத்திற்கு தனி கூட்டுறவு கடன் சங்கம் அமைத்து கூட்டுறவு பண்டகசாலை அமைக்க வேண்டும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய நிர்வாகிகள் ராஜா சந்திரன், வெங்கடேசன், குமார் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் ராஜா நன்றி கூறினார்.