விசைப்படகு மீனவர்களின் போராட்டம் வாபஸ்


விசைப்படகு மீனவர்களின் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


தொடர் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டத்தில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு 61 சதவீதம், மீன் பிடி தொழிலாளர்களுக்கு 39 சதவீதம் என பங்குத் தொகை பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக விசைப்படகு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடனுக்காக மீன்பிடி தொழிலாளர்களின் பங்கு தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை 6 சதவீதமாக குறைக்கவேண்டும் எனவும், வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் கடந்த 6-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

பேச்சுவாா்த்தை

இந்த போராட்டம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துைண போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், உதவி கலெக்டர் கவுரவ் குமார், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி 1 மாதத்தில் தங்களது அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் மீனவர்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

திரேஸ்புரம்

இதற்கிடையே நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். மேலும் விசைப்படகு மீனவர்களின் போராட்டம் காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி தளத்தில் மீன் வாங்குவதற்காக, வியாபாரிகள், மக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது.


Next Story