குமரி மேற்கு கடலில் மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகு மீனவர்கள்


குமரி மேற்கு கடலில் மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 31-ந்தேதி தடைகாலம் நிறைவு பெறுவதால் குமரி மேற்கு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர். இதற்காக படகுகளில் ஐஸ் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குளச்சல்:

வருகிற 31-ந்தேதி தடைகாலம் நிறைவு பெறுவதால் குமரி மேற்கு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர். இதற்காக படகுகளில் ஐஸ் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடி தடைக்காலம்

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவங்களாக உள்ளது. குமரி கிழக்கு கடல் பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் முதல் சென்னை திருவள்ளூர் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்்தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடல் பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களுக்கு ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது.

குளச்சல் துறைமுகம்

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் ஆழ்கடல் வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்துச் செல்வர்.

இன்னும் 2 நாட்களில்...

இந்த ஆண்டும் குமரி மேற்கு கடலில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனால், விசைப்படகுகள் அனைத்தும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்ப்பதும், வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் குமரி மேற்கு கடல் பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ளது.

களைகட்டும் துறைமுகம்

அதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் இருந்து விசைப்படகுகளில் ஐஸ் நிரப்புவது மற்றும் குடிநீர் ஏற்றுவது உள்ளிட்ட ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீன் தொழில் சார்ந்த தொழிலாளர்களும் மீண்டும் குளச்சல் துறைமுகத்துக்கு வந்து தங்களது வழக்கமான பணியை தொடங்கி உள்ளனர்.

இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகம் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.


Next Story