மீன்வளத்துறையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
கோட்டைப்பட்டினத்தில் மீன்வளத்துறையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்:
மீனவர்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக மீன்வளத்துறையினர் 4 விசைப் படகு மீதும், கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக 5 விசைப்படகு மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் மீன்வளத்துறையினர் வேண்டுமென்றே பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் மீன்வளத்துறையினரை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
மானிய டீசலை நிறுத்த வேண்டும்
மீன்பிடி தடை காலத்தில் என்ஜின் பொருத்திய நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. தடைக்காலத்தில் விசைப்படகுக்கு வழங்கும் மானிய டீசலை எப்படி தடை செய்கிறார்களோ அதை போல் நாட்டுப்படகுக்கு வழங்கும் மானிய டீசலை நிறுத்த வேண்டும். தடைகாலத்தில் நாட்டுப்படகில் சலங்கை வலை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. நாட்டுப்படகிற்கு வழங்கும் மானிய டீசலை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை மீன்வளத்துறையினர் தடுக்க வேண்டும்.
அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகு மூலம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ராட்சத படகுகளை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்தினால் விசைப்படகுகள் வரிசையாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் வாபஸ்
இந்நிலையில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் படகு மீது போட்ட வழக்கினை உரிய விசாரணை செய்து வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் மீனவர்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.