தூத்துக்குடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் குடும்பத்தினர் முற்றுகை போராட்டம்


தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் குடும்பத்தினர் வியாழக்கிழமை இரவு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டநிலையில், நேற்று இரவு குடும்பத்தினர் துறைமுகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வேலை நிறுத்தம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன் பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

முற்றுகை

நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் மீண்டும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ், தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் தலைமையில் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதே நேரத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் சிலர் மீன்பிடி துறைமுகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தென்பாகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story