உரக்கடையில் புகுந்து வியாபாரி மீது சரமாரி தாக்குதல்
பிரம்மதேசம் அருகே பரபரப்பு உரக்கடையில் புகுந்து வியாபாரி மீது சரமாரி தாக்குதல் போலீசார் தீவிர விசாரணை
பிரம்மதேசம்
மரக்காணத்தை அடுத்த முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வைத்தியநாதன்(வயது 64). இவர் அதே கிராமத்தில் உரக்கடை வைத்து பூச்சிக்கொல்லி மற்றும் உரம் வியாபாரம் செய்து வருகிறார். வைத்தியநாதன் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் வைத்தியநாதனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த தகவல் அறிந்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காந்தாடு கிராமத்தை சேர்ந்த பழனி மகன் அசோகன்(27) நேற்று முன்தினம் வைத்தியநாதனிடம் உரம் வாங்கி சென்றதாகவும், பின்னர் நேற்று காலை அவர் தனது உறவினர் ஒருவருடன் வைத்தியநாதனிடம் வந்து கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அசோகன் கடையில் கிடந்த நாற்காலியை எடுத்து வைத்தியநாதனை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய சம்பவம் முருக்கேரி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.