மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததாக அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் மீது சரமாரி தாக்குதல்


மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததாக அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் மீது சரமாரி தாக்குதல்
x

இரும்பாலை அருகே அரசு பள்ளியில் மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததாக ஆய்வக உதவியாளரை, மாணவிகளின் பெற்றோர்கள் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

இரும்பாலை:

சரமாரியாக தாக்கினர்

சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆய்வக உதவியாளராக கருப்பூரை சேர்ந்த வீரவேல் (வயது 38) என்பவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதுடன் தவறான கண்ணோட்டதுடன் பார்ப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைமை ஆசிரியையிடம் மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் வீரவேல் மீது பெற்றோர்கள் புகார் கூறினர்.

இதற்கிடையில் அந்த கூட்டத்துக்கு வந்திருந்த வீரவேலை திடீரென அங்கிருந்த பெற்றோர்கள் பிடித்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சீல்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பெற்றோர்களிடம் இருந்து ஆய்வக உதவியாளர் வீரவேலை போலீசார் மீட்டனர். அதைத்தொடர்ந்து அவரை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்த வீரவேலை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story