தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 24 Sept 2023 2:30 AM IST (Updated: 24 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

எரியோடு அருகே தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை 6 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

எரியோடு அருகே தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை 6 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்குவாதம்

கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் புங்கம்பாடியை சேர்ந்த மருதமுத்து (வயது 47) என்பவர் ஓட்டினார். அதில், கண்டக்டராக சிங்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (42) இருந்தார்.

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள வடுகம்பாடியை சேர்ந்த கோபி என்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் அந்த பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் குஜிலியம்பாறை அருகே வடுகம்பாடி பிரிவில் இறங்க டிக்கெட் கேட்டார். அப்போது கண்டக்டர் சிவக்குமார், இது 'ரூட் பஸ்'. முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் என்று கூறியதுடன், வடுகம்பாடி பிரிவில் நிற்காது என்று கூறினார். இதனால் கோபி, கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் கோபி, வடுகம்பாடியை சேர்ந்த தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பஸ் நிறுத்தத்திற்கு வரவழைத்தார்.

கண்டக்டர் மீது தாக்குதல்

இதற்கிடையே அந்த பஸ் குஜிலியம்பாறையை கடந்து வடுகம்பாடி பிரிவு பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த கோபியின் நண்பர்கள் பொன்னர், பிரபு, மணிமுத்து, அகிலன், முருகன் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். மேலும் அவர்கள் அந்த பஸ்சில் ஏறி, கண்டக்டர் சிவக்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது கோபியும், அவரது நண்பர்களும் சேர்ந்து, பஸ் நிறுத்தத்தில் நிறுத்தமாட்டீர்களா என்று கூறி சரமாரியாக தாக்கினர். இதில், சிவக்குமார் காயமடைந்தார். பின்னர் கோபியும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் மருதமுத்து, எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து, கோபி மற்றும் அவரது நண்பர்கள் பொன்னர், பிரபு, மணிமுத்து, அகிலன், முருகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.

வைரலான வீடியோ

கண்டக்டர் சிவக்குமார், கோபி மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியபோது, அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதில், 6 பேரும் சேர்ந்து சிவக்குமாரை அடிப்பதும், கால்களால் உதைப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து அந்த வீடியோவை சிவக்குமார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதனை ஏராளமானோர் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் வடுகம்பாடியை சேர்ந்த சிலர் நேற்று காலை அதே தனியார் நிறுவன பஸ்சை மறித்து, அதில் வந்த டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபி மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story