கல்லூரி மாணவியை தேடி குமரிக்கு வந்த திருச்சி பெண் மீது சரமாரி தாக்குதல்


கல்லூரி மாணவியை தேடி குமரிக்கு வந்த திருச்சி பெண் மீது சரமாரி தாக்குதல்
x

ஓரினச்சேர்க்கை உறவை மறக்க முடியாததால் கல்லூரி மாணவியை தேடி குமரிக்கு வந்த திருச்சி பெண்ணை பெற்றோர் தாக்கி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

ஓரினச்சேர்க்கை உறவை மறக்க முடியாததால் கல்லூரி மாணவியை தேடி குமரிக்கு வந்த திருச்சி பெண்ணை பெற்றோர் தாக்கி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே அறையில் தங்கி இருந்தனர்

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 27 வயதுடைய பட்டதாரி மாணவி ஒருவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவர் படிப்பு படித்து வருகிறார். இதற்காக தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த விடுதியில் திருச்சியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணும் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

ஒரே அறையில் தங்கி இருந்ததால் அவர்கள் ேதாழிகளாக மாறினர். அவர்கள் இடையே தோன்றிய பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்சிக்கு சென்று மாணவியை தங்களுடன் அழைத்து வந்தனர்.

குமரிக்கு தேடி வந்தார்

அதன்பின்பு திருச்சியை சேர்ந்த அந்த பெண், தனது தோழியுடன் பேச முடியாமல் பரிதவித்தார். இந்தநிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தோழியை தேடி குமரி மாவட்டம் தூத்தூருக்கு வந்தார். இங்கு மாணவியை பார்க்க வேண்டும் என அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் திருச்சி பெண்ணிடமும், மாணவியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி, அந்த பெண்ணை தனக்கு தெரியாது என்றும், தங்களுக்குள் எந்த விதமான உறவும் இல்லை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் திருச்சி பெண்ணிடம், மாணவியை இனிமேல் தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வாடகை வீட்டில் தங்கினார்

ஆனாலும், தோழியை பிரிந்து செல்ல மனமில்லாத அந்த பெண் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்க தொடங்கினார். அத்துடன் மாணவியை தனியாக சந்தித்து பேசிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வாய்ப்புக்காக மாணவியின் வீட்டை சுற்றிச்சுற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் அந்த பெண் மீண்டும் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரிடம் பேச முயற்சி செய்தார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி துரத்தி அடித்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் அந்த பெண்ணை மீட்டு பாதுகாப்பாக ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த பெண் தோழியை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story