தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல்
பள்ளிபாளையத்தில் காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளர்களை சரமாரியாக தாக்கிய நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
தொழிலாளர்கள்
பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (வயது 23), பிரதீப்குமார் (25), நவீன்குமார் (23). தொழிலாளர்கள். நேற்று முன்தினம் அவர்கள் புதன்சந்தைப்பேட்டை அக்ராஹாரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் காரில் வந்த பள்ளிபாளையத்தை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் ராம் பிரபு (36), கவுதம் (25), சந்துரு (24), தினேஷ்குமார் (25) ஆகியோர் ஆரன் அடித்து ஓரமாக செல்லும்படி அவர்களிடம் கூறினா். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர்.
இதையடுத்து இரவு மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறு முற்றி காரில் வந்த 4 பேரும், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், நவீன்குமார் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர்.
3 பேர் கைது
இதில் காயம் அடைந்த 3 பேரும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராம்பிரபு, கவுதம், சந்துரு ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகிய தினேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.