தடுப்பணை கொடுக்கும் வாழ்வும், அழிவும்!


தடுப்பணை கொடுக்கும் வாழ்வும், அழிவும்!
x
தினத்தந்தி 7 Aug 2023 1:15 AM IST (Updated: 7 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாழ்வு கொடுப்பதற்கு தடுப்பணை காரணமாக இருந்தாலும், தடுப்பணைக்கு அடுத்து வைகை ஆற்றில் பெரிய அளவில் உள்ள மேடான பகுதியால் ஆற்றின் போக்கு திசைமாறி வெள்ளம் ஏற்படும் காலங்களில் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் அளவில் சேதங்களை விளைவிக்கிறது.

தேனி

நீர்வளத்தை பெருக்குவதில் தடுப்பணைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆறுகள், ஓடைகளில் ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாவது தடுக்கப்பட்டு, தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆறுகளில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. தடுப்பணை பகுதிகளில் மணல் தேங்குவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. தடுப்பணை அருகாமையில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதால் விவசாயம் செழிக்கும்.

வைகை தடுப்பணை

தடுப்பணையோடு மதகுகள் அமைத்து ஆற்றுநீரை விவசாயத்துக்கு திருப்புவதால் விளை பயிர்கள் உற்பத்தி பெருக்கத்துக்கும் வழிவகை ஏற்படுகிறது. நீர்வளத்தை மேம்படுத்துவதிலும், விவசாயத்தை வலுப்படுத்துவதிலும் தடுப்பணைகளின் பங்கு மகத்தானது.

இதனால், ஆறுகளில் தடுப்பணை தேவை என்ற கோரிக்கையை விவசாயிகள் ஒவ்வொரு பகுதியிலும் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தேனி அருகே பள்ளப்பட்டியில் மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கையை கால் நூற்றாண்டை கடந்தும் விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். பலகட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட போதிலும் தடுப்பணை அமைக்கப்படவில்லை.

அதே காலகட்டத்தில் தான் தேனி அருகே சங்ககோணாம்பட்டி பகுதியில் மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள் முன்வைத்து வந்தனர். அங்கு தடுப்பணை அமைத்தால் நிலத்தடி நீர் மேம்பட்டு, விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்பினர். இதற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோடையிலும் வற்றாத கொடை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர் அப்பகுதியில் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது. மானாவாரியாக கிடந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், நெல் சாகுபடி செய்யும் நிலங்களாக மாறின.

வைகை ஆற்றில் பல மாதங்களாக நீரோட்டம் இல்லை என்ற போதிலும் இந்த தடுப்பணை பகுதியில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடையிலும் வற்றாத கொடையாக அந்த தடுப்பணை அமைந்துள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியை பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் வளர்த்து மேய்ச்சலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கிறது.

திசைமாறும் வெள்ளம்

தடுப்பணை கட்டப்பட்ட பிறகு அப்பகுதி விளை நிலங்களில் உயிர்ப்புடன் பல்வேறு பயிர் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு புறம் வளமும், வாழ்வும் இந்த தடுப்பணையால் கிடைத்தாலும், மற்றொரு புறம் இந்த தடுப்பணை அமைந்தபிறகு விளைநிலங்களில் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்.

வாழ்வு கொடுப்பதற்கு தடுப்பணை காரணமாக இருந்தாலும், தடுப்பணைக்கு அடுத்து வைகை ஆற்றில் பெரிய அளவில் உள்ள மேடான பகுதியால் ஆற்றின் போக்கு திசைமாறி வெள்ளம் ஏற்படும் காலங்களில் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் அளவில் சேதங்களை விளைவிக்கிறது.

இந்த தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் போதே விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது, தடுப்பணை கட்டுவதற்கு தேர்வு செய்த இடத்தின் மேற்கு பகுதியில் மேடான பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வடக்கு பகுதியில் தடுப்பணை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். ஆனால், ஏற்கனவே தேர்வு செய்த இடத்திலேயே தடுப்பணை கட்டப்பட்டது.

கரைக்கப்படாத மேடு

கம்பீரமாக தடுப்பணை கட்டப்பட்ட போதிலும், அதன் அருகில் கரைக்கப்படாத மேடான பகுதியும் கம்பீரமாகவே நிற்கின்றன. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, மேற்கு பகுதியில் உள்ள மேடான பகுதியில் வெள்ளம் மோதி, கிழக்கு பகுதி நோக்கி திரும்புகிறது. இதனால், ஆற்றின் வழித்தடம் மாறி விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.

அத்துடன் வருசநாடு, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்படும் பாலித்தீன் குப்பைகள், செடி, கொடிகள் என அனைத்தும் விளை நிலங்களில் புதைந்து மண் மேவி விடுகிறது. ஒவ்வொரு முறை வெள்ளம் வந்து வடிந்து சென்ற பிறகும் விளை நிலங்களை சீரமைப்பது, கரைகளை பலப்படுத்துவது என விவசாயிகளுக்கு பாதிப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, 'இந்த தடுப்பணையை இன்னும் சற்று கீழ் பகுதியில் கட்டி இருந்தால் இன்னும் அதிக பயன் கிடைத்து இருக்கும். தற்போது கட்டப்பட்ட பகுதி பாறையாக இருந்தது. சில ஆண்டுகளில் அதில் மண் மேவிவிட்டன. இதனால், தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. தடுப்பணையின் மேற்கு பகுதியில் உள்ள மேடு என்பது கடினமற்ற பாறைகளால் ஆனது. அவற்றை அகற்ற வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த மேட்டை கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப் பகுதியை கரைத்து விட்டால் ஆற்று வெள்ளம் வழித்தடம் மாறிச் செல்வது தடுக்கப்படும். ஆறு அதன் போக்கில் சென்று விடும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள், எந்திரங்களை பயன்படுத்தினால் சில நாட்களில் இந்த மேட்டை கரைத்து விடலாம். அதன் மூலம் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும்' என்றனர்.

சங்க காலத்தில் இருந்தே வைகை ஆறு சிறப்பான பெயர் பெற்றுத் திகழ்கிறது. வாழ்வை கொடுக்கும் வைகை, அழிவை கொடுக்கிறது என்றால் அது வேதனையானது. தடுப்பணைக்கு அருகில் உள்ள மேட்டை கரைத்தால் அழிவைத் தடுக்கலாம். தடுப்பணை கட்டப்பட்டதன் நோக்கம் முழுமையாகி விவசாயம் தொடர்ந்து செழிக்க ஏதுவாக அமையும். எனவே, அரசு இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story