2 இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன


2 இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பலத்த மழையால் 2 இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் வீட்டுக்குள் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் பலத்த மழையால் 2 இடங்களில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் வீட்டுக்குள் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டனர்.

தடுப்புச்சுவர் இடிந்தது

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ராஜாஜி நகர் பகுதியில் திடீரென நகராட்சி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

மேலும் அதன் இடிபாடுகள் ஒரு வீட்டின் முன்பகுதியை மூடியது. இதனால் வீட்டின் கதவை கூட திறக்க முடியவில்லை. வீட்டில் இருந்த சல்முல்லா, உபயத்துல்லா, நசீம், ஷர்மிளா ஆகிய 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், இடிபாடுகள் வீட்டின் முன்புறம் விழுந்து கிடந்ததால், அவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர்.

4 பேர் மீட்பு

இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் முன்புறம் கிடந்த கற்களை அகற்றினர். அதன் பின்னர் வீட்டில் இருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் அருகே உள்ள குடியிருப்புகள் இடியும் அபாயம் உள்ளதால், அங்கு வசிப்பவர்களை பாதுகாப்பு கருதி வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத் நகர் பகுதியில் ராதா என்பவரது வீட்டு முன்புறம் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீடு அந்தரத்தில் தொங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பேரட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் கூறும்போது, பாரத் நகரில் தடுப்புச்சுவர் அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஆய்வு செய்து, மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கப்படும் என்றார்.

மழையளவு

இதேபோல் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. கோத்தகிரி அருகே ஓரசோலை அண்ணா நகரை சேர்ந்த கவிதா என்பவரது வீட்டின் ஒரு பகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண தொகை ரூ.4,100 வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-40, நடுவட்டம்-14, கிளன்மார்கன்-16, மசினகுடி-10, குந்தா-16, கேத்தி-28, கோத்தகிரி-19, கோடநாடு-46 உள்பட மொத்தம் 396 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 1.3 செ.மீ. பதிவானது.



Next Story