பருத்திக்கான ஆதார விலையை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்
பருத்திக்கான ஆதார விலையை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்
திருப்பூர்
பருத்திக்கான ஆதார விலையை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு சைமா சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பருத்திக்கான ஆதார விலை
சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மாதங்களாக பஞ்சு பதுக்கல் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை நிலவியபோது, பஞ்சு கேண்டி 1-க்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பருத்தி சீசன் தொடங்கிய உடனே 1 கேண்டியின் விலை ரூ.72 ஆயிரம் என குறைந்துவிட்டது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதார விலையை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்.
முதல் தரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம், இரண்டாம் தரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். இதை நூற்பாலைகள் மற்றும் வியாபாரிகள் கொடுக்க மறுத்தால் இந்திய பருத்தி கழகம் தலையிட்டு பருத்தியை கொள்முதல் செய்து அரைத்து நியாயமான விலையில் வினியோகிக்க வேண்டும்.
5 லட்சம் பேல்
வியாபாரிகள் அரசு நிர்ணயம் செய்த விலையை கொடுத்து கொள்முதல் செய்தாலும், இந்திய பருத்தி கழகம் கண்காணித்து, நம் உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ளதை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மாதம் 5 லட்சம் பேல் மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கும், அதற்கு மேல் ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும். பெரும் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்து பதுக்கி வைத்து விலை ஏற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை மத்திய அரசின் ஜவுளித்துறை மேற்கொண்டால் விலையேற்றம் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
ஜவுளித்தொழில், பின்னலாடை தொழில் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். விவசாயிகளும் மகிழ்ச்சியடைவார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
----