நீச்சல் குளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்


நீச்சல் குளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட நீச்சல் குளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்ட நீச்சல் குளத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை விடுமுறை

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நீச்சல் குளம் கட்டப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நன்னிலம், பூந்தோட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீச்சல் பயிற்சிக்காக பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். 12 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரூ. 1,180 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீச்சல் குளம்

இங்கு பயிற்சி அல்லாமல் சாதாரணமாக குளிக்க வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.59 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் நீச்சல் குளம் மற்றும் அதனை சார்ந்துள்ள கட்டமைப்புகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. மேலும் குளிக்க வருபவர்களுக்காக மூன்று உடைமாற்றும் அறைகள், இரண்டு கழிவறைகள், இரண்டு குளியல் அறைகள் என ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.

இதில் உடை மாற்றும் அறை மிகுந்த சேதமடைந்து சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேபோன்று கழிவறை மற்றும் குளியலறையும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டும், கதவுகள் உடைந்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில்

மேலும் நீச்சல் குள நிர்வாக கட்டிடத்தின் தரைப்பகுதி முழுமையாக உள்வாங்கியும் காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் சேதம் அடைந்த குளியலறை மற்றும் உடைமாற்றும் அறை போன்றவற்றை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

மேலும் குளியலறை மற்றும் கழிவறையில் தண்ணீர் வரத்தும் குறைவாக உள்ளது என நீச்சல் குளத்திற்கு வருவோர் புகார் தெரிவிக்கின்றனர். இங்கு உள்ள உயிர்காப்பாளர் உள்ளிட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த...

கோடை காலத்தில் மாணவ மாணவிகள் அதிக அளவில் வருவதால் வெளியில் இருந்து பயிற்றுனர் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு நீச்சல் பயிற்சியை பொருத்தவரை காலை 7 மணியிலிருந்து காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நான்கு மணி நேர பயிற்சிக்காக வெளியூரில் இருந்து வரும் மாணவ மாணவிகள் உடை மாற்றுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக 12 நாள் பயிற்சிக்கு ரூ.1,180 கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கு பயிற்சி பெறுவது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பை உறுதி செய்ய...

எனவே மாவட்ட நிர்வாகம் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அதிக மாணவ மாணவிகள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற முடியும் என்றும் அதேசமயம் பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் அதன் ஆயுட்காலம் முடிவதற்குள் சேதமடைந்து காணப்படுவதால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்து நீச்சல் பயிற்சி பெற வரும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story