அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்


அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்
x

ஜோலார்பேட்டை பகுதியில் அடிப்படசை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

ஒன்றியக்குழு கூட்டம்

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், ரகு மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி மற்றும் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களின் பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அதன் விவரம் வருமாறு:-

கழிவுநீர் கால்வாய்

சி.எஸ்.செந்தில்குமார்:- ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புகளின் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல வழி இன்றி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. எனவே அப்பகுதியில் சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

ஆ.கலாஆஞ்சி:- கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்தது. அவைகளை சீரமைக்கவும் புது சாலைகள் அமைக்கவும் சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும். அம்மையப்பன் நகர் ஊராட்சி பாய்க்காரன் வட்டத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

குடிநீர் தொட்டி

ஆர்.மணிகண்டன்:- ஊராட்சிக்குட்பட்ட ஜெய்பீம் நகர் பகுதியில் பூங்கா அருகே சிதலமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியும், காந்திபுரத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்க வேண்டும். துரை நகர், தில்லை நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அரசு கட்டிடம் கட்டவேண்டும்.

சவிதா தேவன்:- அக்ராஹரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்து வேறு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் பூபதி என்பவரை நியமிக்க வேண்டும்.

கே.ஜி.சரவணன்:- ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கும் இடைப்பட்ட 750 மீட்டர் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கைவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் கோரிக்கைகள் அனைத்தும் நிதிநிலைமாக்கேற்றவாறு நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


Next Story