அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்


அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அவரகண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி,

அவரகண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அவரகண்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அவரகண்டி கிராமத்தில் 140 குடும்பங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 60 ஆண்டு காலமாக இங்கு வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை கிராமத்தில் நடைபாதை மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகள்

இதேபோல் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் அருகே கவுண்டம்பாளையம் வரை நடந்து செல்ல வேண்டும். மற்ற நாட்களில் குழந்தைகள் சாதாரணமாக நடந்து சென்று விடுகின்றனர். ஆனால், மழைக்காலத்தில் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நடைபாதை, தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 117 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனபிரியா, (கணக்கு) கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story