அழிவின் விளிம்பில் கூடை பின்னும் தொழில்


அழிவின் விளிம்பில் கூடை பின்னும் தொழில்
x

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் அழிவின் விளிம்பில் உள்ள கூடை பின்னும் தொழிலை காப்பாற்ற அரசு உதவியை தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேலம்

எடப்பாடி

அழிவின் விளிம்பில்...

இன்றைய நாகரீக மனித வாழ்வில், அன்றாட பயன்பாட்டில் பெரும் இடத்தை பிடித்திருப்பது பிளாஸ்டிக் பொருட்கள் தான். இதன் வரவால் நலிந்துவரும் பல்வேறு கைத்தொழில்களில் மத்தியில் மூங்கில் கூடைப்பின்னும் (முடையும்) தொழிலானது அழிவின் விளிம்பில் உள்ளது.

கடந்த காலங்களில் தமிழர்களின் அன்றாட வாழ்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக்கூடை, பூஜைக்கூடை மற்றும் மக்கரை எனப்படும் பெரிய அளவிளான விவசாயக்கூடை, எருக்கூடை, ஏணி, இருக்கைகள், அசைவு நாற்காலி என பல்வேறு வடிவங்களில் மூங்கில் பொருட்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் இன்றோ மூங்கில் பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக் மற்றும் நைலான் பொருட்களின் வரவால் படிப்படியாக மறைந்து விட்டன.

கூடைகள்

மூங்கில் கூடை உற்பத்தி செய்வதை முக்கிய தொழிலாக கொண்டு எடப்பாடியை அடுத்துள்ள மாக்கனூர் பகுதியில் பல குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மூலம் கச்சா மூங்கிலை கொள்முதல் செய்கிறார்கள். மேலும் இங்குள்ள மூங்கில் டெப்போக்களில் ஒரு டன் மூங்கில் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி வந்து பல்வேறு நிலைகளில் பதப்படுத்தி, பல்வேறு வடிவிலான மூங்கில் பொருட்கள் தயாரிக்கிறார்கள்.

முதலில் சிம்பு எனப்படும் மூங்கில் குச்சிகள் தயார் செய்யப்படுகிறது. இவற்றை கொண்டு பல அளவிலான கூடை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பின்னுக்கிறார்கள். இங்கு தயாராகும் கூடைகள் ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இங்கு தயாரிக்கும் கூடைகள் ெரயில்வே பணிகள், பழ கிடங்குகள், தொழிற்சாலைகள், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதே போல எடப்பாடியை அடுத்த மூலப்பாதை, கச்சுப்பள்ளி பகுதியில் தயாராகும் மூங்கில் பொருட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு உதவி

ஆலச்சம்பாளையம் சாலையோரம் வசித்து வரும் குடும்பத்தினர் உற்பத்தி செய்யும் மூங்கில் ஏணி, மூங்கில் கட்டில் உள்ளிட்டவை கடந்த காலங்களில் நல்ல சந்தை மதிப்பை கொண்டிருந்தன. ஆனால் தற்போது அவற்றின் விற்பனை குறைந்ததுடன், விலையும் குறைந்து விட்டது.

மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மூங்கில் பொருட்களின் விற்பனை மிகவும் குறைந்து விட்டதால், அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் பலர், வேறு வேலைக்கு சென்று விட்டனர். மீதமுள்ள மூங்கில் கூடை பின்னுபவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள், கூடைபின்னும் தொழிலாளர்களின் கருத்துகள் வருமாறு:-

வரவேற்பு

மாக்கனூர் பகுதியை சேர்ந்த மூங்கில் கூடை பின்னும் தொழிலாளி சின்னம்மாள்:-

நானும், எனது கணவர் கோவிந்தனும் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மூங்கில் கூடை பின்னும் தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு இதுதவிர வேறு தொழில் தெரியாது. ஆரம்பகாலத்தில் இத்தொழிலிலுக்கு இருந்த வரவேற்பு தற்போது இல்லை, காரணம் தற்போது மூங்கில் கூடைகளுக்கான தேவை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் எங்களது அன்றாட வருவாயும் குறைந்துபோனது.

போக்குவரத்து செலவு, கச்சா மூங்கில் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மூங்கில் பொருட்களின் உற்பத்தி செலவு கூடியுள்ள நிலையில் இதனை சந்தைபடுத்த முடியாமல் திணறி வருகிறோம். இதனை அதிக அளவில் கொள்முதல் செய்ய வியாபாரிகள் அண்மை காலமாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த தொழிலில் குறைவான வருவாய் உள்ளதால் இளைய தலைமுறையினர். இத்தொழிலை கற்றுக்கொள்ள முன்வருவது இல்லை.

மாற்று தொழில்

மூங்கில் பொருட்களை விற்கும் பழனியம்மாள்:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நானும், எனது கணவர் ரவியும் மூங்கிலாளான வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். தொடக்க காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விற்பனையான மூங்கில் வீட்டு உபயோகப் பொருட்கள் அண்மை காலமாக மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாவது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் பெருகிவிட்டன. மின் கட்டண உயர்வு, கடை வாடகை உயர்வு, மூங்கில் பொருள்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளுக்கு இடையே இந்த தொழிலை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகிறோம். தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் நாங்கள் நிச்சயம் மாற்று தொழிலை நாட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்த தொழிலை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும்.

வெள்ளாண்டி வலசுவை சேர்ந்த கார்த்திகா:-

அண்மைக்காலமாக அனைத்து தரப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பிளாஸ்டிக் வீட்டு உபயோகப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு காரணம் மலிவான விலை மற்றும் பல்வேறு நிறங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. மேலும் மூங்கிலால் ஆன வீட்டு உபயோகப் பொருட்களை விட பிளாஸ்டிக் பொருட்கள் அழகான தோற்றத்தில் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் குடும்பத் தலைவிகள் இதை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

வியாபாரி சவுந்தர்:-

ஒரு காலத்தில் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி விற்பனையான மூங்கிலால் ஆன வீட்டு உபயோக பொருட்கள் தற்போது வெறும் காட்சி பொருளாகவே கடைகளில் இடம்பெறுகின்றது. இதன் விற்பனை சதவீதம் மிகவும் குறைந்ததால், இதை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் விரும்புவதில்லை. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் மூங்கில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story