கூடைப்பந்து போட்டி; திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன்


கூடைப்பந்து போட்டி; திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன்
x
தினத்தந்தி 27 Sept 2023 2:45 AM IST (Updated: 27 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தேனி

அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையேயான 17-வது மண்டல அளவில் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி, தேனி நாடார் சரசுவதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் திண்டுக்கல், கரூர், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் பங்கேற்றன. அதில், தேனி நாடார் சரசுவதி என்ஜினீயரிங் கல்லூரி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. என்ஜினீயரிங் கல்லூரி, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். என்ஜினீயரிங் கல்லூரி, கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் கரூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணியும், 2-வது அரையிறுதியில் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லூரி அணியை வீழ்த்தி தேனி நாடார் சரசுவதி கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இறுதிப்போட்டியில் 61-47 என்ற புள்ளிக்கணக்கில் தேனி நாடார் சரசுவதி என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

பின்னர் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story