பேச்சிப்பாறை அணையில் 1,000 கன அடி உபரிநீர் திறப்பு எதிரொலி: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை


பேச்சிப்பாறை அணையில் 1,000 கன அடி உபரிநீர் திறப்பு எதிரொலி: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையினால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை கடந்து 44 அடியாக இருந்தது. இதனால் அணையிலிருந்து தொடர்ந்து 7 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அப்போது திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் அணையின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் மீண்டும் 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வெள்ள அபாய அளவு 42 அடியாகும். இதே போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 72 அடியைக் கடந்து 72.87 அடியாக உயர்ந்துள்ளது.

அதே போல் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 12 அடியை கடந்து 12.17 மற்றும் 12.27 அடியாக உள்ளது. நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்த உபரி நீர் கோதையாறு தண்ணீருடன் கலந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் குளிக்க தடை

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மீண்டும் தடை விதித்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் நேற்று அறிவிப்பு பதாகை வைத்து உள்ளது. அருவி அருகில் செல்லாமல் இருக்க தடுப்பும் அமைத்து உள்ளனர். வெள்ளம் காரணமாக மாலையில் இருந்து தடுப்பணையில் படகு சவாரியும் நடைபெறவில்லை.

இதனால் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல், படகு சவாரியும் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.


Next Story