நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்


நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்
x

கோடை காலத்தில் நீர்நிலைகளில் ஆழம் தெரியாமல் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை

கோடை காலத்தில் நீர்நிலைகளில் ஆழம் தெரியாமல் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீர்நிலைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கோடை வெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும். பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு நீர்நிலைகள் மற்றும் கைவிடப்பட்ட கல்குவாரிகளுக்கு விளையாட செல்வதை பெற்றோர்கள் கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதையும், தேவையற்ற பயணங்களுக்காக வெயிலில் வருவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கல்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர், ஏரி, குளம், குட்டைகள் ஆகிய பகுதிகளில் அதன் ஆழம் தெரியாமல் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறைகள்

ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறை, காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக உடனுக்குடன் தகவல் மற்றும் புகார் தெரிவிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172 - 271766 / 271966 ஆகிய எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் மூலமாக 9489668833 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உடனுக்குடன் அனுப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க பொதுமக்கள் உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story