பேட்டரி கார் சோதனை ஓட்டம்


பேட்டரி கார் சோதனை ஓட்டம்
x

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சோதனை ஓட்டம் நடந்தது. சுற்றுலா வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக விரைவில் இயக்கப்பட உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சோதனை ஓட்டம் நடந்தது. சுற்றுலா வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக விரைவில் இயக்கப்பட உள்ளது.

தாவரவியல் பூங்கா

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்குகிறது. கோடை சீசன் ஏப்ரல், மே மாதங்களிலும், 2-வது சீசன் செப்டம்பர், அக்டோபர், மாதங்களிலும் நடக்கிறது. தொடர் விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்துக்கு 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் 90 சதவீதம் பேர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்துவிட்டு, பிற சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளது. பல்வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் பல்வேறு வகை தாவரங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது.

பேட்டரி வாகனம்

மேலும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் மேடான பகுதியில் உள்ள இத்தாலியன் பூங்கா, கள்ளிச்செடிகள் உள்ள மாளிகை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மலர்களை ரசிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வசதிக்காக பேட்டரி வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக பூங்காவில் 6 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பேட்டரி கார் ஒன்று வரவழைக்கப்பட்டு உள்ளது. பூங்கா வளாகத்தில் பேட்டரி கார் சோதனை ஓட்டம் நடந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உத்தரவு வந்த பின்னர், பூங்காவுக்கு சுற்றுலா வரும் முதியவர்கள், மாற்றத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் இயக்கப்படும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story