பட்டுக்கோட்டை தொழிலாளி மலேசியாவில் படுகொலை
பட்டுக்கோட்டை தொழிலாளி மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை தொழிலாளி மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
குடும்ப வறுமை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(வயது 41). இவருக்கு திருமணமாகி புகழ் என்ற மனைவியும், ஆதித்யன்(5) என்ற மகனும், ஹட்சிகா(3) என்ற மகளும் உள்ளனர். விநாயகமூர்த்தி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார்.
குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நிரந்தர விசாவிற்கு ரூ.1 லட்சம் செலுத்தி மலேசியாவிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜெண்டு ஏமாற்றி டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பி உள்ளார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகமூர்த்தியின் தந்தை அன்பழகனுக்கு விநாயகமூர்த்தி மலேசியாவில் வேலை செய்த வந்த நிறுவனத்தின் முதலாளி போன் செய்து தங்கள் மகனை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன், என்னால் அவ்வளவு பணம் அனுப்ப முடியாது. முடிந்த அளவுக்கு யாரிடமாவது கடன் வாங்கி ரூ.7 லட்சம் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
கொன்று விடுவதாக மிரட்டல்
அதன்பிறகு அந்த நபர் சினிமா பாணியில் நான் ஒரு 10 ரூபாய் நோட்டை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த நோட்டை உங்களிடம் காண்பிப்பவரிடம் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் தங்கள் மகன் விநாயகமூர்த்தியை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார் .
படுகொலை
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முத்தலிப் என்பவர், அன்பழகன் வீட்டிற்கு வந்து 10 ரூபாய் நோட்டை அவரிடம் காண்பித்து, ரூ.7 லட்சத்தை வாங்கி சென்றுள்ளார். அப்போது முத்தலிப், விநாயக மூர்த்தியின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் புகைப்படத்தையும் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
மறுநாள்(4-ந்தேதி) மலேசியாவில் விநாயகமூர்த்தியை கொன்று அவரது உடலை ஒரு மூட்டையில் கட்டி சாலையில் வீசி விட்டதாக மலேசியாவில் உள்ள உறவினர் ஒருவர் அன்பழகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசில் புகார்
மகன் படுகொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகன், இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், மலேசியாவில் "சேர்டாங் செலங்கூர்"என்ற பகுதியில் உள்ள இரும்பு கடை நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்த தனது மகன் விநாயக மூர்த்தியை அந்த நிறுவனத்தின் முதலாளியே கொன்றுவிட்டார் என தெரிவித்திருந்தார்.
உடலை கொண்டு வர கோரிக்கை
மேலும் தனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், அன்பழகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதேபோல் தஞ்சை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம், அன்பழகன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொலை செய்யப்பட்ட தனது மகன் விநாயகமூர்த்தியின் உடல் மலேசியாவில் தான் உள்ளது. அங்குள்ள மருத்துவ பரிசோதனை அறிக்கையில் வெறும் 4 வார்த்தைகள் மட்டுமே உள்ளது. இது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே எனது மகனின் உடலை மீண்டும் பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியவேண்டும். மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனதுமகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சோகம்
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மலேசியாவுக்கு சென்ற தொழிலாளி அங்கு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பட்டுக்கோட்டை மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.