மதுரையில் பி.பி.சி. ஆவண படத்தை திரையிட முயன்றதால் பரபரப்பு- போலீசார் குவிப்பு
மதுரையில் பி.பி.சி. ஆவண படத்தை திரையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
மதுரையில் பி.பி.சி. ஆவண படத்தை திரையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆவண படம்
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது அந்த மாநில முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி நாட்டில் பல்வேறு இடங்களில் அந்த ஆவண படத்தை திரையிட்டு வருகின்றனர்.
போலீசார் குவிப்பு
இந்தநிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை திரையிடுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், பாவேல் சிந்தன், சுரேஷ், குரோனி செந்தில் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய அனுமதி பெற்று ஆவணபடத்தை திரையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதன்படி, நாளை (இன்று) திரையிடப்படும் என ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து, அதற்கான அனுமதி கடிதத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் நாளை அனுமதி மறுக்கப்பட்டால் அதை மீறி ஆவணப் படத்தை அதே இடத்தில் திரையிடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.