பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்


பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
x

பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் வேலூர் பதிவு மண்டல டி.ஐ.ஜி. சுதாமல்யா பேசினார்.

வேலூர்

புத்தாக்க பயிற்சி

வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 பதிவு மாவட்டங்கள் உள்ளது. இதில் 45 சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் சார்பதிவாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோருக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் பதிவு மண்டலத்தில் பணியாற்றும் சார்பதிவாளர்கள், அலுவலக ஊழியர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி வேலூரை அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடந்தது.

வேலுர் பதிவு மண்டல டி.ஐ.ஜி. சுதாமல்யா தலைமை தாங்கினார். மாவட்ட பதிவாளர்கள் பிரகாஷ், தேன்மலர், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல நிர்வாக சார்பதிவாளர் உமாபதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் செல்வநாராயணசாமி கலந்து கொண்டு பயிற்சிகள் வழங்கி பேசினார்.

இந்த புத்தாக்க பயிற்சியில், நடைமுறை சட்ட பதிவுகள் குறித்தும், போலி ஆவணங்கள் கண்டறிதல், ஆவணங்கள் தொலைந்தால் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் குறித்தும், அனுமதிபெறாத மனைப் பிரிவுகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

கனிவுடன்...

கூட்டத்தில் மண்டல டி.ஐ.ஜி. சுதாமல்யா பேசுகையில், நீங்கள் அனைவரும் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். தேவையில்லாமல் அவர்களை அலைக்கழிக்க கூடாது. அவர்களை காக்க வைக்கவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது. பதிவு செய்யப்பட்டபின் ஆவணங்களை விரைவாக வழங்க வேண்டும். அனைத்து பதிவுகள் மூலம் கடந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை ரூ.131 கோடி வரை வருவாய் கிடைத்தது. அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.136 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பதிவு செய்பவர்களிடம் இருந்து புகார்கள் ஏதும் வராதவகையில் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதில், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் ஸ்ரீதர், சக்திவேல், மணி, அறிவழகன் உள்பட பலர் கொண்டனர்.


Next Story