ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்


ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்
x

சுயநலவாதிகளை சிலரை அப்புறப்படுத்தி விட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தஞ்சாவூர்

சுயநலவாதிகளை சிலரை அப்புறப்படுத்தி விட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

கண்டன பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் ராஜசேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கீதாசேகர், அசோகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் தேவதாஸ் வரவேற்றார்.

டி.டி.வி.தினகரன் பேச்சு

கூட்டத்தில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

ஆட்சி அதிகாரம், பதவிக்காக மட்டும் அ.ம.மு.க., தொடங்கப்படவில்லை. 6 ஆண்டுகள் சோதனைகளையும், தேர்தல் தோல்விகளையும் தாண்டி இன்னும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். உங்களை போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழித்து விட முடியாது.

யாரோ சிலர், குழப்பத்தால் குழப்பிப்போய் எங்கோ விலைபோய் இருக்கலாம். என்னுடன் பயணிக்கும் தெளிந்த நீரோடையை போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை அ.ம.மு.க. பட்டிதொட்டி எல்லாம் இருக்கும்.

இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கும், இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள அ.தி.மு.க.வை மீட்டெடுக்கவும் என்னுடன் ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும், நிர்வாகிகளும் கைகோர்த்துள்ளனர். இது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு. தேவைக்காக ஏற்பட்ட நிகழ்வு அல்ல.

நாம் பிரிந்து இருந்தால் தி.மு.க., என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியாது என்பதாலும், தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் இணைந்துள்ளோம்.

கபளீகரம் செய்து விட்டார்

எங்களின் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவியை யாரோ ஒருவர் கபளீகரம் செய்து விட்டார். அவரிடம் இருந்து அதை மீட்டெடுக்கத் தான் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் தொண்டர்களால் தான் தி.மு.க. வை வீழ்த்த முடியும்.

அவர்கள், இரட்டை இலையின் மதிப்பை இழக்க செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் சமாதி கட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்களும், அ.ம.மு.க. தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தேன் தடவிய வார்த்தைகளால் பேசி விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு திராவகத்தை ஊற்றி தமிழக மக்களை மு.க.ஸ்டாலின் நோகடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு சில சுயநலவாதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராஜேந்திரன், அ.ம.மு.க. மாநில இளைஞரணி தலைவர் எம்.ஆர்.காமராஜ், எம்.ஜிஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஏழுப்பட்டி பாலு, அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், அமைப்பு செயலாளர் ஜோதி, ஒன்றிய செயலாளர்கள் எம்.செந்தில்குமார், மதிழயகன், எஸ் செந்தில்குமார், அப்பாதுரை, பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் துரைராஜ் நன்றி கூறினார்.


Next Story