தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வு கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தென் மேற்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்மேற்கு பருவமழை...
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வருவாய்த்துறை சார்பில் புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் கண்காணித்தல், பள்ளிகள், பொது கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள் போன்றவைகளை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மனித உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, வீடுகள் சேதம் போன்றவைகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புயல் மற்றும் வெள்ள காலங்களில் விபத்துகளை தடுக்க ஏதுவாக உடனுக்குடன் மின் இணைப்புகளை துண்டித்தல், அவசர தேவைக்கான ஜெனரேட்டர், ரப்பர் கிளவுஸ், பெட்ரோமேக்ஸ் லைட் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கொண்டு ஒன்று முதல் 11 வரை ஏற்றப்படும் சமயங்களில் பாதிப்புகள் குறித்து மீனவர்களுக்கு எடுத்துச்சொல்லி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள தாய்-சேய் நல விடுதிகள் அனைத்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், புயல் வெள்ள நேரங்களில் அனைத்து துறை அரசு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், ஊராட்சி ஒன்றிய ஆணையர் புயல் பாதுகாப்பு மையங்களை பழுது நீக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் அந்தந்த வட்ட தலைமை இடங்களிலும், வட்ட பகுதிகளிலும் இருந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.