மனிதாபிமானத்துடன் செயல்பட்டு போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்
‘சட்ட அதிகாரங்கள் கொடுக்கப்பட்டாலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்று பயிற்சி போலீசாருக்கு ஐ.ஜி. முருகன் அறிவுறுத்தினார்.
பயிற்சி நிறைவு
பழனியில், சிறப்பு போலீஸ் படை 14-ம் அணி மற்றும் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி செயல்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 245 பேருக்கு 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி கடந்த மார்ச் மாதம் முதல் இங்கு தொடங்கியது.
இந்நிலையில் போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு நேற்று நடந்தது. இதற்கு பள்ளி முதல்வர் அய்யாச்சாமி தலைமை தாங்கினார். பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
தமிழக போலீஸ் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி போலீசாரின் அணிவகுப்பை ஐ.ஜி. முருகன் பார்வையிட்டார்.
போலீசாக மாற்றுவது கடினம்
பின்னர் சட்ட தேர்வு, கவாத், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
ஒரு சாதாரண மனிதனை பயிற்சி கொடுத்து போலீசாக மாற்றுவது கடினமானது. 8 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் டி.ஜி.பி. முதல் சாதாரண போலீஸ் வரை 1 லட்சத்து 15 பேர் உள்ளனர். இவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
போலீஸ் துறையில் பணியாற்றுவது மிகவும் கடினம். பழனியில் பயிற்சி பெற்றவர்களில் 61 என்ஜினீயர்கள், 98 பட்டதாரிகள், 15 முதுநிலை பட்டதாரிகள் உள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்று அறிந்த பட்டதாரிகள் போலீசில் வந்தது மகிழ்ச்சியானது.
மனிதாபிமானத்தோடு செயல்பட...
போலீஸ்துறையில் டி.ஜி.பி முதல் காவலர் வரையுள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். உண்மையான அரசாங்கமாக போலீஸ்துறையே உள்ளது. ஏனென்றால் மூடப்படாத கதவு, 24 மணி நேரமும் செயல்படுவது போலீஸ் நிலையங்கள் தான்.
போலீஸ் துறைக்கு வரும் எந்தவொரு தகவலும் அரசின் கவனதுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் போலீஸ் துறை தான் அரசின் கண்ணும், காதுமாக இருக்கிறது. எனவே போலீஸ் துறையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக மிக அவசியம்.
போலீசாருக்கு சட்டவிதிகளின்படி அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் போது போலீஸ் துறைக்கு மென்மேலும் பெருமை சேரும்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.